பெருமாநல்லூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு பெறப்பட்ட பணத்தில் கையாடல் நடந்ததாகக் கூறி, ஊராட்சி உறுப்பினர்கள் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக, பாஜக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பத்மாவதி, காசிராஜன், கவிதா மகேந்திரன் ஆகியோர் திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனு விவரம்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி மற்றும் அவரது கணவரும், ஊராட்சியின் துணைத் தலைவருமான வேலுச்சாமி ஆகியோர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஆட்சியரின் ஒப்புதல் பெறாமல் கடந்த 4 மாதங்களாக தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பை சுமார் 150 வீடுகளுக்கு வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பயனாளியிடமும் ரூ.6200 பெறப்பட்டு, ரூ.2200-க்கு மட்டும் ரசீது வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.4000, காசோலை மூலமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். மக்கள் பங்களிப்புத் தொகை சுமார் ரூ.6 லட்சத்தை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்துள்ளனர்.
மக்கள் செலுத்தும் குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்தும், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆனால், 4 மாதங்களாக செலுத்தப்படவில்லை.
மக்களிடம் பெறப்பட்ட பங்களிப்புத்தொகையில் கையாடல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊராட்சி செயலர் மகேஷ் கூறும்போது, "வைப்புத்தொகை ரூ.1000, ஆண்டு முன்பணம் ரூ.1200, மக்கள் பங்களிப்புத் தொகை ரூ.4000 என பெற்றுள்ளோம். கிராம தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பெறப்படும் ரூ.4000-க்கும், தற்போது காசோலை எடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் கூறும்போது, "மக்கள் பங்களிப்புத் தொகை ரூ.6 லட்சம் கையில்தான் உள்ளது. பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. சாக்கடை உள்ளிட்ட வசதிகள் கேட்டுள்ளனர். அதற்கான திட்டத் தயாரிப்பு இன்னும் வரவில்லை. வந்ததும் அந்த தொகை உரிய முறையில் செலுத்தப்படும்" என்றனர்.