கோவை மாவட்டத்தில் விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில், "கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொடக்கத்தில் வழங்கப்பட்ட சத்துணவு, சுகாதார வசதிகள் மற்றும் பரிசோதனையை தற்போது வழங்குவதில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, உரிய மருந்துகள் வழங்குவதில்லை என்றும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கழிவறை, குளியலறை போன்றவற்றை சரிவர சுத்தம் செய்வதில்லை. படுக்கைகளில் விரிப்புகள் இல்லாததால் வெப்பம் அதிகமாக உள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது. எனவே, கரோனா சிகிச்சை மையங்களில் குறைபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், "ஆனைமலை வட்டத்துக்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, கோலபருத்தியூர், கோட்டூர், செம்மனாம்பதி, மாரப்ப கவுண்டன்புதூர், காளியாபுரம், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, தக்காளி, மரவள்ளிக்கிழங்கு, காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மரநாய்களும், மரப்பூனைகளும் தென்னை குரும்பைகளைச் சேதப்படுத்துகின்றன. காட்டுப்பன்றி தாக்குதலால் பயிர்கள் பெரிதும் சேதமடைகின்றன. வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒற்றைக்காலில் நின்று, தங்களது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.