ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், போந்தூர் ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட குளம் சித்திரங்களால் பொலிவு பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்தூர் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் வடாத்தா குளம் உள்ளது. பராமரிப்பு இன்றி காணப்பட்ட இந்தக் குளத்தைச் சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து 1,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வடாத்தா குளம், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் இறங்கி ஏற வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
குளக்கரையில் இயற்கையாகவே வளர்ந்துள்ள ஈச்சமரம், வேப்பமரம் ஆகியவை குளத்தின் அழகை மேலும் அழகாக்கியுள்ள நிலையில், இளம் தலைமுறையினருக்கு நமது மரபு சார்ந்த பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் குளத்தின் பக்கவாட்டுச் சுவரில் ஜல்லிக்கட்டு, விவசாயம் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன, இதனால் இக்குளம் புதுப்பொலிவு பெற்றுள்ளது என ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.