சமஸ்கிருதம் இந்துக்கள் அல்லது குறிப்பிட்ட சாதியினரின் மொழியல்ல. அது சாமானியரின் மொழி என்று சமஸ்கிருத பாரதி அமைப்பின் வட தமிழக தலைவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருதம் சாமானியருக்கான மொழி என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நேற்று தொடங்கியது.
மாநாட்டின் தொடக்க விழாவில் ஜோ டி குரூஸ் பேசியதாவது:
நாம் இத்தனை ஆண்டுகளாக இருட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கி றோம். நமது அறிவு களஞ்சியம் எங்கே? நமது கலாச்சாரம் எங்கே? நம்மிடமிருந்து அனைத்தும் பறிக் கப்பட்டுவிட்டன. சமஸ்கிருதம் அனைவருக்குமான மொழி. இந்த மொழியில் பாரம்பரிய இலக்கியங் கள் உள்ளன. மகாகவி பாரதி இதன் முக்கியத்துவத்தை அறிந்து அங்கீகரித்திருந்தார். அதனால்தான் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் நூல்களை மொழியாக்கம் செய்தார்.
சமஸ்கிருதம் சொர்கத்திலிருந்து வந்துவிடவில்லை. மக்கள் பங்களிப் பினால் வளர்ந்த மொழியாகும். வியாசர், காளிதாஸ் விலைமதிக்க முடியாத பங்காற்றியுள்ளனர். ஏராளமான சாமான்ய மக்கள் இந்த மொழிக்கு பங்காற்றியுள்ளனர். இந்த மொழி இந்துகளுக்கான மொழி, குறிப்பிட்ட சாதியினருக்கான மொழி என்று கூறுவது சரியல்ல. சமஸ்கிருதம் சாமானிய மக்களின் மொழி.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் இந்த விழாவில் பேசும்போது, “சமஸ் கிருதம் முறையான கட்டமைப்பு களை கொண்ட மொழியாகும். சமஸ்கிருதம் அறிவின் அடையா ளம். ஆன்மீக நடவடிக்கைகளுக்கு சமஸ்கிருதம் பயன்படுத்தப்படுவது உண்மைதான். ஆனால், அதை தாண்டி பல பயன்பாடுகள் சமஸ் கிருதத்துக்கு உள்ளன. இந்தியா வுக்கு வெளியில் 40 நாடுகளில் 257 பல்கலைக்கழகங்களில் சமஸ் கிருதம் கற்றுத்தரப்படுகிறது” என்றார். நம்மை அறியாமலேயே தினசரி வாழ்வில் சமஸ்கிருதத்தை பயன்படுத்தி வருகிறோம் என்று தூர்தர்ஷன் சென்னை கேர்ந்திரா இயக்குநர் மாரியப்பன் இந்நிகழ்வில் கூறினார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சுவாமி, எஸ்.ஐ.இ.டி கல்லூரியின் தலைவர் மூசா ராசா, சமஸ்கிருத பாரதி அமைப்பின் அகில பாரத ஒருங்கிணைப்பு செயலாளர் தினேஷ் காமத், மீனாட்சி கல்லூரியின் செயலாளர் கே.எஸ்.லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியின்போது காளிதாசர் எழுதிய மேகதூதம் நூலின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் சமஸ்கிருத முக்கியத்துவம் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.