குவைத்தில் ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட கம்பம் இளைஞர் ஊர் திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன்(26) கடந்த ஆக. 2-ம் தேதி குவைத் நாட்டுக்கு ஓட்டுநர் வேலைக்காகச் சென்றார். ஆனால், அங்கு ஒட்டகம் மேய்க்க விடப்பட்டதால் அதிருப்தி அடைந்து அதுபற்றி வாட்ஸ் அப் மூலம் தமிழகத்தில் உள்ள நண்பர்களுக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’வில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்ததால், அவர் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினர். நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இதனால் குடும்பத்தினரும், உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சதாம்உசேனின் மனைவி யாஸ்மின் பானு கூறும்போது, ‘‘எனது கணவர் வீடுவந்து சேர்ந்த பின்னரே, எனக்கு உயிர் வந்ததுபோல இருக்கிறது. அவரது வருகைக்காக இரவு முழுவதும் காத்திருந்தோம். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் குழந்தைகள் துள்ளிக் குதித்தன. இனி வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அவரிடம் கூறிவிட்டேன். இங்கேயே ஓட்டுநர் வேலைக்குச் செல்ல உள்ளார். அவரை மீட்டுக் கொடுத்த ‘தி இந்து’வுக்கும், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கும் நன்றி’’ என்றார்.
சதாம் உசேன் கூறும்போது, ‘‘நான் குவைத்துக்குச் சென்ற ஆக. 2-ம் தேதிதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்திருந்தாராம். இதனால் அரபுக்காரர்கள் எனது பெயரைக் கேட்டதும் ஒட்டகம் மேய்க்க உத்தரவிட்டனர். நான் முடியாது என மறுத்தபோது, என்னைத் தாக்கினர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு ஊர் வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை மீட்பதில் துணை நின்ற ‘தி இந்து’வுக்கு நன்றி’’ என்றார்.