தமிழகம்

காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி: வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் எஸ்.பி தொடங்கி வைத்தார்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அவரைத் தொடர்ந்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரங்கன்றுகள் நடுவதற்கு துணைக் கோட்டங்கள் வாரியாக 8 துணை கோட்டங்களுக்கும் மொத்தம் 400 மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

பின்னர் கரோனா பாதிப்புகள் இருக்கும் இந்த சூழ்நிலையிலும் கடமையுணர்வுடன் எவ்வித விடுப்பும் எடுக்காமல் மிகுந்த கஷ்டங்களுக்கிடையே சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் 14 பேரின் பணியை பாராட்டி பரிசு வழங்கி, அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்பி பேசியதாவது:

இந்த உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் தேவை. நாம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம்.

உலகில் உள்ள அனைவரும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிக் கொண்டிருந்தால் சுத்தமான ஆக்ஸிஜனுக்கு நாம் எங்கு செல்வது? அதற்காகத்தான் இயற்கை நமக்கு மரங்களை படைத்து, அதன் மூலம் சுத்தமான ஆக்ஸிஜனை கொடுத்து, கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கின்றன.

மரங்கள் செடி, கொடிகளும் ஒரு உயிரினம் தான். அவைகளுக்கு உயிருள்ளது. இவற்றின் மூலமே நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும்.

காவல்துறையினராகிய நாம் பொதுமக்களுக்கு சேவையாற்றத்தான் வந்துள்ளோம். பொதுமக்களின் நலனே நமக்கு மிக முக்கியம் என்றார் அவர்.

ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசைன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுனைமுருகன் மற்றும் தலைமை காவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT