தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக முதல்வர் வருகைக்காக செய்ய வேண்டிய வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தமிழக முதல்வர் செப். 22-ல் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

ரெ.ஜாய்சன்

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வரும் 22-ம் தேதி தூத்துக்குடிக்கு வரவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார்.

அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி செப்டம்பர் 22-ம் தேதி தூத்துக்குடிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முதல்வர் வருகைக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

முதல்வர் வருகைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் புதிதாக வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு முதல்வர் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், முதல்வர் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அரங்கங்களில் மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT