விருதுநகர் வரும் தமிழக முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கொடுத்துள்ளார் 75 வயது மூதாட்டி ஒருவர்.
விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரது மனைவி மகாலட்சுமி (75). விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இன்று அவர் அளித்த மனுவில், "விருதுநகர் அருகே உள்ள இனாம்காசி ரெட்டியபட்டியில் திறக்கப்படாமல் உள்ள கூட்டுறவு வங்கியை நிரந்தரமாக திறக்கக்கோரியும், அந்த வங்கி மூலம் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கக்கோரியும், நான் அவ்வங்கியில் சிறுக சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எனது மருத்துவச் செலவுக்கு எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் தங்களுக்கு 2 முறை மனுக்கொடுத்துள்ளேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் எனது கோரிக்கையை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில் இம்மாதம் 21-ம் தேதி விருதுநகர் வரும் தமிழக முதல்வருக்கு அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழியாக சூலக்கரை போலீசாருக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.