தமிழகம்

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக தொடர்ந்த போராட்டம்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலை வாங்க மறுத்தும் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் உறவினர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் ராஜலிங்கம் (50). கடந்த சனிக்கிழமை காலை மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை கொண்டு சென்றபோது வழியிலேயே ராஜலிங்கம் உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராஜலிங்கத்தின் சடலம் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ராஜலிங்கத்தின் உறவினர்களும் ஆதரவாளர்களும் முதுகுடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், ராஜபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக ராஜலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்திருந்த நிலையில் அங்கு எஸ்.பி. பெருமாள் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மார்க்கெட் பகுதிகளில் இன்று குவிக்கப்பட்டனர்.

கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று ஊர்வலமாக வந்த சிலர் கடைகளை அடைக்க வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களை கீழே தள்ளியும் சேதப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி. பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சென்னை நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்குத் தொடர்பாக 3 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT