தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பரிசல் விபத்தில் ஆற்றில் மூழ்கிய ஒரு வயது குழந்தையின் உடல் நேற்று மாலை மீட்கப்பட்டது.
சென்னை தெற்கு உஸ்மான் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது மனைவி கோமதி, குழந்தைகள் சச்சின், தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கவுரி, கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரஞ்சித், மருமகள் கோகிலா, இவர்களின் குழந்தை சுபிக்ஷா(1) ஆகியோர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி சுற்றுலா சென்றனர்.
அங்கு பரிசல் பயணம் மேற்கொள்ள முயன்றபோது பரிசல் எதிர்பாராத வகையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜேஷ், கோமதி, சிறுவன் சச்சின் ஆகிய 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப் பட்டனர். கவுரி, தர்ஷன் ஆகியோர் அன்று மாலையே சடலமாக மீட்கப் பட்டனர். அடுத்த நாள் கோகிலா, ரஞ்சித், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது.
ஆனால், ரஞ்சித்-கோகிலா தம்பதி யரின் 1 வயது குழந்தையான சுபிக் ஷாவின் நிலை மட்டும் தெரியாமல் இருந்தது. எனவே தினமும் ஒகேனக்கல் தீயணைப்பு மீட்புப் பணி குழுவினர் நிலைய அலுவலர் ஜானகிராமன் தலை மையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் பரிசல் ஓட்டிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று 70-க்கும் மேற்பட்ட பரிசல் களில் 150 பரிசல் ஓட்டிகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை 4.40 மணியளவில், விபத்து நடந்த இடத்துக்கு அருகிலேயே குழந்தை சுபிக்ஷாவின் உடல் மிதப்பதை பரிசலோட்டிகள் கண்டனர். தொடர்ந்து நீரில் மூழ்கிக் கிடந்ததால் குழந்தையின் உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. எனவே சிதைந்து விடாதபடி உடலை லுங்கியால் கட்டி பரிசலோட்டிகள் கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.