தமிழகம்

‘சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்’- நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம்

செய்திப்பிரிவு

நீட் தேர்வு குறித்தும் மாணவர்கள் உயிரிழப்பு குறித்தும் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர் குறிப்பிட்டுள்ள வாசகம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுக்க நீட் தேர்வு நேற்று (செப்டம்பர் 13) நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வந்தபோது அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது அரசியல் கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்துக் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

"'நீட்‌ தேர்வு' பயத்‌தில்‌ ஒரே நாளில்‌ மூன்று மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்டது மனசாட்‌சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்‌' சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர்‌ அச்சம்‌ மிகுந்த பேரிடர்‌ காலத்தில்கூட, மாணவர்கள்‌ தேர்வெழுதி தங்கள்‌ தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும்‌ சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்‌, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச்‌ சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்‌ நிதர்சனம்‌ அறியாதவர்கள்‌ கல்விக்‌ கொள்கைகளை வகுக்கிறார்கள்‌.

கரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது'' என அறிக்கையின் ஒரு பகுதியில் சூர்ய குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சூர்யா நீதிமன்றம் குறித்து குறிப்பிட்டுள்ள வரிகள், நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் அறிக்கை நீதிமன்ற அவமதிப்புச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதிய கடிதம் வருமாறு:

“தலைமை நீதிபதி அவர்களுக்கு...

சினிமா நடிகர் சூர்யா வெளியிட்டு சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அறிக்கை குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவரது அறிக்கையைப் பார்த்தேன். அதில் அவர் அறிக்கையின் ஒரு இடத்தில், ‘கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் இக்கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது கருத்து தவறாகச் சித்தரிப்பது மட்டுமல்ல, நீதித்துறை குறித்த தவறான கருத்தை உருவாக்குவதாகவும் உள்ளது.

சூர்யாவின் இந்தக் கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஆகவே நமது நீதித்துறையின் மாண்பினைக் காக்கும் வகையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”.

இவ்வாறு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் கடிதம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றங்களின் நீண்டகால நடவடிக்கையை ஒரே நாள் நடக்கும் தேர்வுடன் ஒப்பிட முடியாது, சூர்யாவின் கருத்தை அப்படியே விட்டுவிடலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் உள்ளவர்கள் மக்களிடையே பிரபலாமாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது மக்களை எளிதில் சென்று சேரும். நீதிமன்றம் குறித்த தவறான கருத்து மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் குலைத்துவிடும். ஆகவே நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் விதத்தில் யாரும் பேசக்கூடாது என முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் கருத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என யாரும் கருத்து சொல்லிவிட முடியாது. நீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு நபர் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல, தலைமை நீதிபதி, பல நீதிபதிகள் அமர்வு இருக்கிற நிலையை ஆராய்ந்து எடுக்கும் முடிவு எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT