நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வராததால், பூங்காக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வால், தோட்டக் கலைத் துறையின் கீழ் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை கடந்த 9-ம் தேதி திறக்கப்பட்டன.
இ-பாஸ் அனுமதி பெற்ற பின்பே நீலகிரி மாவட்டத்துக்குள் வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம்அறிவுறுத்தியிருந்தது.
இரண்டாம் சீசன் தொடங்கிய நிலையில் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவற்றில் டேலியா, பிரெஞ்ச் மேரிகோல்டு, சால்வியா, பேல்சியம், பிக்கோனியம் உட்பட பல்லாயிரக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. எனினும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. பூங்காக்கள் திறக்கப்பட்ட 5 நாட்களில் 2000-க்கும் குறைவான சுற்றுலாப்பயணிகளே பூங்காக்களுக்கு வந்துள்ளனர்.
தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவுக்கு 50-க்கும்குறைவானவர்களே வந்துள்ளனர். ஊரடங்குக்குப்பின் திறக்கப்பட்ட பூங்காக்களில் இரண்டாம் சீசன் களையிழந்துள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.