தமிழக சட்டப்பேரவை 3 நாள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் ‘நீட்’டைத் தடை செய் என்கிற முகக்கவசத்துடன் பங்கேற்றனர்.
சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக அம்மாதம் 24-ம் தேதியுடன் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. பேரவை விதிகளின்படி அடுத்த 6 மாதங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வழக்கமான பேரவை அரங்கில் சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், வேறு இடத்தில் நடத்துவது குறித்து சபாநாயகர் ஆலோசனை நடத்தினார். கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதன்படி கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, பேரவைக் கூட்டம் நடை பெறும் 3-வது தளத்துக்குச் செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பிரத்யேக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 9 மணிமுதல் திமுக, அதிமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு வந்தனர். அதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீட்டைத் தடை செய், Ban NEET , என்கிற வாசகத்துடன் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
கூட்டம் தொடங்கிய முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு, கூட்டம் தொடங்கிய நிலையில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார், பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகுமான்கான் உள்ளிட்டோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை திமுக சார்பில் வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பின்னர் இன்றைய பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
15-ம் தேதி (நாளை) கேள்வி நேரம், பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானம், அது தொடர்பான விவாதம் நடைபெறும். 16-ம் தேதி காலை கேள்வி நேரம் முடிந்ததும் துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அத்துடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டங்கள் தொடர்பான மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. அத்துடன் கூட்டம் நிறைவடைகிறது.
2 நாட்கள் முழுமையாக பேரவைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வு, ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம், கரோனா தடுப்பு, புதிய கல்விக் கொள்கை போன்ற விவகாரங்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.