தமிழகம்

மருத்துவமனை, விடுதிகளுக்கு 5, 25 கிலோ பைகளில் அம்மா உப்பு: அண்டை மாநிலங்களில் விற்கவும் ஏற்பாடு

செய்திப்பிரிவு

மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு 5 மற்றும் 25 கிலோ பைகளில் அம்மா உப்பு வழங்கவும், தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் அம்மா உப்பை விற்கவும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் (2.30 கோடி டன்) 11 சதவீதம் (26 லட்சம் டன்) தமிழகத்தில் உற்பத்தியாகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு உப்பு நிறுவனம்தான், அரசுக்கு சொந்தமான உப்பு தயாரிக்கும் நிறுவனமாகும்.

பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட அயோடின் தூள் உப்பு, இருவித செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் உள்ள உப்பு என மூன்று வகையான அம்மா உப்புகளை ஒரு கிலோ ரூ.10, ரூ.14, ரூ.21 ஆகிய விலையில் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இவை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றன கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி வரை 6,760 மெட்ரிக் டன் அம்மா உப்பு விற்பனையாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அயோடின் கலந்த உப்புக்கும் வரவேற்பு இருந்ததால் அம்மா உப்பு திட்டத்தின் கீழ் ஒரு கிலோ ரூ.8 என்ற குறைந்த விலையில் கல் உப்பும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தாண்டு பிப்ரவரி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 வகை அம்மா உப்புக்களும் விற்கப்படுகின்றன.

இது தவிர அம்மா உப்பை 5 மற்றும் 25 கிலோ பைகளில் போட்டு மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அம்மா உப்பை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு உப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உத்தர வுப்படி இதற்கான திட்டத்தை தொழில்துறை தயாரித்துள்ளது.

SCROLL FOR NEXT