தமிழகம்

பெண் டிஎஸ்பி தற்கொலை வழக்கு: நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை- கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆவணங்களும் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரு வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக விஷ்ணுபிரியா பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி திருச்செங்கோடு டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

குறிப்பாக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறை உயர் அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.

மேலும், விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியும், ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ்வரி, “கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் கொடுத்த நெருக் கடியே விஷ்ணுபிரியா உயிரிழப் புக்கு காரணம்” என குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் அவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையே சிபிசிஐடி போலீஸார் திருச்செங்கோட்டில் விசாரணையை தொடங்கினர். விஷ்ணுபிரியா தங்கியிருந்த வீடு, அவர் தற்கொலை செய்து கொண்ட அறை உள்ளிட்ட இடங்களிலும், டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள காவல்துறையினரிடமும் விசாரணை நடைபெற்றது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கும் கோவை மண்டல சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரிக்கும் சேலம் மண்டல சிபிசிஐடி டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இவ்விரு வழக்குகள் தொடர்பாக காவல் கண்காணிப் பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆகியோரிடம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விரு வழக்குகளிலும் உள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித் தனர்.

விசாரணை முடிந்து வெளியில் வந்த சிபிசிஐடி அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் இந்த வழக்கு குறித்து கேட்டபோது, எந்த பதிலும் அளிக்காமல் சென்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங் கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT