தமிழக ஏரி, குளங்களில் வேலிகருவை முள்ளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் பேசியதாவது:
ஏரி, குளங்களுக்கு வரும் மழை நீரை வேலிகருவை முள் உறிஞ்சி விடுவது விவசாயத்துக்கு நீர் பாசனத்தை தடை செய்வதாக உள்ளது. சமீபத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுபடி வேலிகருவை முள்ளை அகற்ற தமிழக அரசு தனி ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யக்கூடிய மழைநீரை தமிழகத்திலுள்ள 42 ஆயிரம் ஏரி, குளங்களில் சேமித்து வைத்து, 25 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்ய ஏரிகளின் கரைகளை பலப்படுத் தவும், ஆழப்படுத்தவும், வாய்க் கால்களை தூர் வாரவும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீர் தொடர்ந்து கிடைத்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர்ப் பங்கீடு ஒழுங்குமுறை ஆணையமும் அமைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வே.உலக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.