தமிழகம்

எழும்பூர் அருகே ரூ.1 கோடி செலவில் ரயில்களை நிறுத்த புதிய ‘யார்டு லைன்’

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை எழும்பூர் அருகே ரயில்களை நிறுத்த ரூ.1 கோடி செலவில் 600 மீட்டர் தூரத்துக்கு புதியதாக ஒரு ‘யார்டு லைன்’ அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த 3 மாதங்களில் தொடங்கவுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக முக்கியமான ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருச்செந்தூர், மங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் 48 விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன.

இதுதவிர, 18 வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப் படுகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் இருந்து எழும்பூர் வழியாக 24 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இதுவே பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் 1.5 லட்சமாக அதிகரிக்கிறது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆனால், ரயில்களை நிறுத்தி நடைமேடைகளுக்கு கொண்டு வந்து இயக்குவதற்கான ‘யார்டு லைன்’ பற்றாக்குறையாக உள்ளது. இதனால், சில நேரங்களில் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘’எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களின் இயக்கம் தற்போது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், விரைவு ரயில்களை நிறுத்துவதற்கு போதிய அளவில் ‘யார்டு லைன்’ இல்லாமல் இருக்கிறது. தற்போது 6 விரைவு ரயில்களை நிறுத்துவதற்கு யார்டு லைன்கள் உள்ளன. ஆனால், இன்னும் 4 யார்டு லைன்கள் தேவையாகவுள்ளது. எனவே, புதியதாக யார்டு லைன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே வாரியத்திடம் பரிந்துரை செய்தோம். இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலையம் சேத்துப்பட்டு இடையே ரூ.1 கோடி செலவில் 600 மீட்டர் தூரத்துக்கு ஒரு யார்டு லைன் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த 3 மாதங்களில் தொடங்கப்பட உள்ளன’’ என்றனர்.

SCROLL FOR NEXT