ஓசூர் ஒன்றியம் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வயலில் மலர்ந்துள்ள சாமந்திப்பூக்கள். 
தமிழகம்

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் பண்டிகைகளையொட்டி ஓசூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில் சாமந்தி சாகுபடி

செய்திப்பிரிவு

ஆயுத பூஜை, விஜய தசமி என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு ஓசூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தட்பவெப்ப நிலை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஆயுத பூஜையும், 26-ம் தேதி விஜயதசமியும் வருவதால் பூஜைக்கு தேவையான சாமந்தி மலர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பூனப்பள்ளியில் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி நாகராஜ் கூறும்போது, ‘‘ஒரு ஏக்கர் சாமந்திப்பூ சாகுபடி செய்ய சுமார் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. சாமந்திப்பூ தோட்டத்தை நன்கு பராமரித்து வந்தால் பண்டிகை காலத்தில் ஒரு ஏக்கருக்கு செலவுகள் போக ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தசரா சிறப்பாக கொண்டாடப்படுவதால் இங்கிருந்து சாமந்திப்பூக்கள் அதிகமாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல இங்கு விளையும் வெள்ளை சாமந்திப்பூக்கள் மும்பை நகருக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது ஒரு கிலோ சாமந்தி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயுத பூஜை சமயத்தில் ரூ.300 வரை விலை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சாமந்திப்பூ உற்பத்தியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறும்போது, ‘‘நடப்பாண்டில் ஆயுத பூஜையை தொடர்ந்து பண்டிகைகள் வரிசையாக வருவதால் மலர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்திப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

SCROLL FOR NEXT