தமிழகம்

‘ஒரே வகை, 67 தோற்றம்’ பரவசமூட்டும் பட்டாம்பூச்சிகள்: கேமராவில் படம் பிடித்து சாதனை படைத்த கோவை அரசு ஊழியர்

க.சக்திவேல்

மழைக்காலம், வறண்ட காலம் என சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பட்டாம் பூச்சிகளின் உருவ அமைப்பில் வேறு பாடுகள் இருக்கும். மழைக்காலங்களில் வெளிவரும் பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் அடர் வண்ண நிறங்களில் காணப்படும். ‘காமன் ஈவினிங் பிரவுன்’ வகையைச் சேர்ந்த (Common Evening Brown) பட்டாம் பூச்சியானது மழைக் காலத்தில் ஒரே ஒரு உருவ தோற்றத்தில் மட்டுமே இருக்கும். வறண்ட காலங்களில் அதன் உருவ அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படும். ஒரு பட்டாம் பூச்சியைப் போன்று மற்றொரு பட்டாம்பூச்சி இருக்காது.

அத்தகைய ‘காமன் ஈவினிங் பிரவுன்’ பட்டாம்பூச்சிகளின் 67 விதமான உருவத் தோற்றங்களை கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் படம்பிடித்து ஆவணப் படுத்தி, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’-ல் இடம்பிடித்துள்ளார் அரசு ஊழியரும், ‘தி நேச்சர் அண்டு பட்டர்பிளை சொசைட்டி’ யின் உறுப்பினருமான தர்ஷன் திரிவேதி. அவரிடம் பேசினோம்.

“பட்டாம்பூச்சிகளை 2016-ம் ஆண்டு முதல் படம்பிடித்து வருகிறேன். 2018-ம் ஆண்டில் ஒரேநாளில் ‘காமன் ஈவினிங் பிரவுன்’ பட்டாம்பூச்சியின் 10 வித உருவ அமைப்புகளை படம்பிடித்தேன். அதன் பின்னரே, வறண்ட காலத்தில் அந்த பட்டாம்பூச்சிக்கு பல்வேறு உருவத் தோற்றங்கள் இருப்பது தெரியவந்தது. இதில் ஆச்சரியப் பட்டு, அந்த பட்டாம்பூச்சி வகையை பின்தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். 2020 பிப்ரவரி வரை 67 வித உருவ அமைப்புகளை ஆவணப்படுத்திய பிறகு, ‘இந்தியா புக்ஆஃப் ரெக்கார்ட்’ பரிசீலனைக்கு அனுப்பினேன். அவர்கள், உரிய புகைப்பட ஆதாரங்கள், ஆவணங் களை சரிபார்த்து உறுதிப்படுத்தி சான்று அளித்துள்ளனர். இந்த வகையைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளுக்கு மேலும் பல உருவ அமைப்புகள் இருப்பதால் அவற்றை தொடர்ந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகிறேன்” என்றார், தர்ஷன் திரிவேதி.

மாலை நேரத்தில் காணலாம்

மற்ற வகை பட்டாம்பூச்சி களுக்கும் இவ்வளவு உருவ வேறுபாடுகள் இருக்குமா என ‘தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி’ ஒருங் கிணைப்பாளர் பாவேந்தனி டம் கேட்டதற்கு, “ஃபுஷ் பிரவுன், ‘ரிங்க்ஸ்’ வகை பட்டாம்பூச்சி களிலும் இதேபோன்று உருவஅமைப்பில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், ‘காமன் ஈவினிங் பிரவுன்’ போன்று அதிக அளவிலான வேறுபாடுகளைக் காண முடியாது. மழைக்காலத்தில் அனைத்து இடங்களிலும் பசுமை நிரம்பி காணப்படும். அப்போது, பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் அடர் நிறத்தில் இருந்தால்தான் இணையைக் கவர முடியும்.

அதோடு, இறக்கைகளில் கண்கள் போன்ற அடர் புள்ளிகள் இருக்கும். இந்த அமைப்பானது பறவைகள் உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து பட்டாம்பூச்சிகளை தற்காத்துக்கொள்ள உதவுகிறது. ஆனால், வறண்ட காலத்தில் கண்ணைக் கவரும் அடர் நிறத்தில் இருந்தால் அவை எளிதாக எதிரிகளுக்கு இரையாக நேரிடும். எனவே, சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப காய்ந்த இலைபோன்று தனது அமைப்பை இந்த பட்டாம்பூச்சிகள் மாற்றிக்கொள்ளும்.

பொதுவாக புற்கள், புதர்கள் நிறைந்த இடங்களில் ‘காமன் ஈவினிங் பிரவுன்’ பட்டாம்பூச்சிகள் காணப்படும். பெரும்பாலும் தரையில்தான் இவை இருக்கும். பகல் நேரங்களில் அதிகம் தென்படாது. மாலை நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தால் கவரப்பட்டு, அதிகளவில் வரும்” என்றார்.

SCROLL FOR NEXT