பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை, தடுப்பணை பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் குளிப்பதையும் ஆபத்தான பகுதிகளில் புகைப்படம் எடுப்பதையும் அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆழியாறில் பூங்கா, படகு இல்லம், குரங்கு நீர்வீழ்ச்சி இருப்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி அருகேயுள்ள வழிகளை பயன்படுத்தி, அணைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.
அணைப் பகுதியில், குளிப்பதற்கும், இறங்குவதற்கும் அனுமதியில்லை. ஆனால் தடையை மீறி விபரீதத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், அணைக்குள் இறங்குவதும், குளிப்பதும், புகைப்படம் எடுத்துக் கொள்வதும் தொடர்கதையாகியுள்ளது.
உயிரிழப்புக்கு முன் அணைப்பகுதி, தடுப்பணை பகுதிக்குள் நுழைவோரை பொதுப்பணித் துறையினரும், ஆழியாறு போலீஸாரும் தடுத்து நிறுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.