செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக உருவான வட்டங்களில் நீதிமன்றங்களை அமைக்கஅரசு முடிவு செய்திருந்தது. அதன்படி செய்யூரில் நீதிமன்றம் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
செய்யூரில், தற்காலிக கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வி.பவானி சுப்பராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதற்கிடையே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட, முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி, என். வசந்தலீலா, நீதிபதி எம்.ஏ.கபீர், செங்கை ஆட்சியர் ஜான் லூயிஸ், காஞ்சி ஆட்சியர் பொன்னையா, காவல்கண்காணிப்பாளர்கள் கண்ணன், சண்முகபிரியா மற்றும் நீதிபதிகள், காவல் துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட நீதிமன்ற நடுவராக ஃபான்னி ராஜன் பதவியேற்றுக் கொண்டார். முதல்நாளான நேற்று 4 வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதுவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் நடந்துவந்த செய்யூர், சித்தாமூர், கூவத்தூர், அணைக்கட்டு காவல் நிலைய வழக்கு விசாரணைகள் இனிமேல் செய்யூர் புதிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன. புதிய நீதிமன்றம் தொடங்கப்பட்டதற்கு இப்பகுதி பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.