சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை பாதுகாக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை ஒட்டியுள்ள பல்லாவரம், கீழ்கட்டளை, செம்பாக்கம், நன்மங்கலம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மதுரைபாக்கம் பகுதியில் உள்ள ஏரிகள்மற்றும் பள்ளிக்கரணை வீராங்கால் ஓடை, ஆதம்பாக்கம், வேளச்சேரி கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழைமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீர்வெளியேறும் கால்வாய் அமைத்தல் மற்றும் சீரமைப்பு பணிகளை ரூ.1 கோடி செலவில் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்லாவரம், கீழ்கட்டளை ஏரியில் உபரிநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்படும் கால்வாய் பணியை பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறைமுதன்மை தலைமை பொறியாளர்ராமமூர்த்தி மற்றும் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
‘‘பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளின் உபரிநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளை பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் ஏரிகளை பாதுகாக்க தேவையான மணல் மூட்டைகள், இயந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்டவற்றை தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளை பாதுகாக்கவும், தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்ள பொதுப்பணித் துறை தயார்நிலையில் உள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.