தமிழகம்

குத்தாலத்தில் அமைய உள்ள அரசுக் கல்லூரிக்கு கம்பர் பெயரைச் சூட்டக் கோரிக்கை

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு அந்தப் பகுதியில் பிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்துத் தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"மயிலாடுதுறை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான குத்தாலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிலும் இந்தக் கல்வியாண்டில் இருந்தே புதிய கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வாய்ப்பினைப் பெறுவார்கள்.

இந்த நேரத்தில் புதிய கல்லூரிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றித் தருவதற்கு ஆவன செய்ய வேண்டுமென முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் புதிய கல்லூரிக்குக் குத்தாலத்திற்குப் பக்கத்திலுள்ள தேரிழந்தூரில் பிறந்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றி, கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர் பெயரினைச் சூட்டிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’ என்ற பாரதியின் வாக்குப்படி பூமியில் சிறந்த புலவர்களில் முதலில் வைத்து உலகெங்கும் தமிழர்களால் கொண்டாடப்படுகிற கம்பரின் பெயரை அவரது பிறந்த பகுதியில் அமையும் அரசு கல்லூரிக்குச் சூட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தமிழுக்கும் தமிழக அரசு செய்கிற மரியாதையாக அமையும்.

எனவே, குத்தாலத்தில் புதிய கல்லூரி அமைகிற போதே ‘கவிச் சக்கரவர்த்தி கம்பர் அரசு கலைக் கல்லூரி’ என்ற பெயரில் அமைத்திட முதல்வர் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு கடிதத்தில் காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT