திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா, மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் கட்சிக் கொடி ஏற்றினார். ஆடிட்டர் அர்ஜூனராஜ், அண்ணா சுடர் ஏற்றி வைத்தார். மருத்துவர் கிருஷ்ணன் பெரியார் சுடர் ஏற்றினார்.
தீர்மானங்கள்
இவ்விழாவில் அக்கட்சியின் சார்பில் ‘தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக ‘லோகாயுக்தா’ சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். மத்திய அரசு ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்காக கட்டாய நில எடுப்பு சட்டத்தை நிறைவேற்ற முற்படுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
நேபிள்ஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராகவும், நெதர்லாந்து நாட்டில் ஹேக் மாவட்ட நீதிமன்றம் புலிகள் இயக்கம் பயங்கரவாதம் இயக்கம் அல்ல எனவும் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, மத்திய அரசும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போராட்ட இயக்கமாக அங்கீகரித்து அதன் மீதான தடையை நீக்க வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெளிவாக முடிவெடுங்கள்
இவ்விழாவில் பெரியார் உருவப் படத்தை திறந்து வைத்து கி. வீரமணி பேசியதாவது:
அடுத்த தேர்தல் முக்கியமல்ல, அடுத்த தலைமுறை முக்கியம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் வைகோ இருப்பதால், அக்கறையோடும், உரிமையோடும் கேட்கிறேன், நல்ல முடிவு எடுக்க வேண்டும். பெரியார் கூறியதுபோன்று இனமானத்துக்காக தன்மானத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை. தன்மானத்துக்கு பல நேரங்களில் அறைகூவல் வந்தாலும் பெரியார், அண்ணா படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு முடிவெடுங்கள். பொதுக்காரியங்களுக்குயாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருங் கள். ஆனால், தேர்தல் கூட்டணியில் தெளிவாக முடிவெடுங்கள். இவ்வாறு வீரமணி பேசினார்.