கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பிணி பெண்களும் அடக்கம். இதற்காக, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்கென பிரத்யேக பிரசவ வார்டும், அறுவை சிகிச்சை அரங்கமும் தயார்ப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கரோனா தொற்றுள்ள 324 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, ரத்த சோகை, வலிப்பு, இருதய நோய் மற்றும் முந்தய அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்ட 197 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் ஏ.நிர்மலா கூறும்போது, "இதுவரை மொத்தம் 105 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில்7 பெண்களுக்கு சுகப்பிரசவமும், 98 பெண்களுக்கு அறுவை சகிச்சை மூலம் பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருந்து, கரோனா தொற்று இருந்த காரணத்தால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்காத இரு கர்ப்பிணிகளுக்கு, இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் தட்டனுக்களை அதிகப்படுத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பிரசவம் பார்க்கப்பட்டது.
மேலும், 76 கர்ப்பிணிகளுக்கு வெளி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்பட்டு, கரோனா தொற்றின் காரணமாக இ.எஸ்.ஐ-யில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பேறுகால பாதிப்புகளும், நுரையீரல் பிரச்னைகளும் இருந்த 31 தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்பட்டன.
இதில், 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்,பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த 4 பச்சிளம் குழந்தைகளுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிகிச்சைகளுக்கு மகப்பேறு துறைத் தலைவர் கீதா தலைமையின் கீழ் செயல்படும் மருத்துவ குழுவினரும், மருத்துவ கண்காணிப்பாளர் டி.ரவிக்குமார் உள்ளிட்டோரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்" என்றார்.