தமிழகம்

பருவமழை காலத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

எஸ்.கோமதி விநாயகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை பொழிவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”விளாத்திகுளம் தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க பணி ஆய்வில் உள்ளது. இது தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தேவையான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி.யிடம் பட்டியல் வழங்கி உள்ளோம். தற்போது கரோனா காலம் என்பதால் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மிக விரைவில் தேர்வுகள் நடைபெற்று அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும்.

தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம் தான். வாழ்க்கையே நீட் தேர்வு தான் என்று மாணவர்கள் அச்சம் கொள்ள கூடாது. மதுரையை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி பூர்ண சுந்தரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரைப்போன்று வாழ்க்கையில் நாம் நம்பிக்கையை கையில் எடுத்தால் வெற்றி நம் கண் முன் இருக்கும்.

இந்த உயிர் தாய், தந்தையால் நமக்கு கொடுக்கப்பட்ட கொடை. இதனை பேணிப் பாதுகாத்து வளர்க்க வேண்டும். மாய்த்துக்கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. மதுரை மாணவி உயிரை மாய்த்துக்கொண்டது போல் துயரம் சம்பவம் இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது என இறைவனை வேண்டுகிறோம்.

தற்போது இந்தியா முழுவதும் ஒரு தகுதி தேர்வு. அது தேர்வா அல்லது தகுதி தேர்வா என்ற விவாதம் நடந்து கொண்டுள்ளது. ஆனால், அதிமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தீர்க்கமாக உள்ளது.

சாமானிய மக்கள், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் வெளியே வரவேண்டியது உள்ளது. சமுதாயம், பொருளாதார ரீதியில் நாங்கள் அவர்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது உள்ளது.

அவர்களுக்கு சமநீதியான வாய்ப்பு கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே, இதுபோன்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்ள எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு தாருங்கள் என நாங்கள் உறுதியுடன் சொல்கிறோம்.

வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு, பருவமழைக்காலத்தையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன, என்றார்” அவர்.

SCROLL FOR NEXT