தமிழகம்

ரஜினி கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ 

எஸ்.கோமதி விநாயகம்

ரஜினி மட்டுமல்ல வேறு யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை. அதிமுக வாக்கு வங்கியை சிதறடிக்க எந்த சக்தியாலும் முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இறுதியாக தமிழகத்துக்கு ஓராண்டுக்காவது விதிவிலக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று, மத்திய அரசு அரசாணை வெளியிடப் போகும் நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நளினி சிதம்பரம் வாதாடி தடையைப் பெற்றார். இல்லையென்றால் ஓராண்டு விதிவிலக்கு கிடைத்திருக்கும்.

காங்கிரஸ், திமுக இன்று அரசியலுக்காக பேசுகின்றனர். அந்த ஓராண்டு விதிவிலக்கு பெற்றிருந்தோம் என்றால், தொடர்ந்து பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதால் வேறுவழியின்றி அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களது கொள்கை. கரோனா காரணம் காண்பித்து இந்தாண்டு நீட் தேர்வு வேண்டாம் என முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

மன அழுத்தத்தின் காரணமாக யாரும் தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். நீட் தேர்வுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் மாநிலமும் தமிழகம் தான். கட்டணம் இல்லாமல் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியையும் தமிழக அரசு செய்து வருகிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.

இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ரஜினி மட்டுமல்ல யார் கட்சி ஆரம்பித்தாலும் பாதிப்பு எங்களுக்கு இல்லை. அதிமுக வாக்கு வங்கியை சிதறடிக்க எந்த சக்தியாலும் முடியாது. அது பல்வேறு காலகட்டத்தில் நிரூபணமாகியுள்ளது. கரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். எத்தனை புதிய கட்சிகள் தோன்றினாலும் புதிய கூட்டணிகள் அமைந்தாலும் பாதிப்பு திமுகவுக்கு தான். அதிமுகவின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட வெற்றி, என்றார் அவர்.

SCROLL FOR NEXT