மதுரையில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி நேற்றிரவு (வெள்ளி இரவு) திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை 6-வது பட்டாலியன் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் முருகு சுந்தரம். மனைவி, ஒரு மகள், மகனுடன் மதுரை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்துவந்தார்.
இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா (19) நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை மகள் ஸ்ரீதுர்கா அறையில் இருந்து வெளியே வராததால் தந்தை கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் பதில் இல்லாததால் செல்போனில் அழைத்துள்ளனர்.
அதுவும் ஏற்கப்படாத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீதுர்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ந்தனர். மதுரை தல்லாகுளம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாணவியின் அறையிலிருந்து 4 பக்க கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தான் நீட் தேர்வுக்குத் தயாராக இருந்தாலும் ஒருவேளை தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த முடிவை எடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர், உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆதலால், தற்கொலைக்கான காரணம் நீட் தேர்வு மன அழுத்தம் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆடியோ வெளியீடு:
மாணவி ஸ்ரீதுர்கா தனது மன அழுத்தம் தொடர்பாக பெற்றோருக்கு ஆடியோ குறிப்பை பதிவு செய்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் நல்ல குடும்பம் கிடைத்திருந்தும் தனக்கு அதை காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். மிஸ் யூ அம்மா, ஐ ஆம் சாரி அப்பா என்று அவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
துணை முதல்வர் இரங்கல்:
இதற்கிடையில், மாணவியின் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்காலத் தூண்களான மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு மன உளைச்சலால் அரியலூர் மாணவர் தற்கொலை செய்துகொண்ட போது, மாணவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுக்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.