கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் பெரியகுளம் ஏலாவில் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டு இயந்திரங்கள் வயலோரம் நிறுத்தப்பட்டுள்ளன. நெற்பயிர்களும் வீணாகி வருகின்றன. படம்: எல்.மோகன். 
தமிழகம்

குமரியில் கனமழையில் சிக்கிய நெற்பயிர்கள்: 3,500 ஹெக்டேரில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையில் சிக்கியதால், 3,500 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பேரிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு பருவமழை கைகொடுத்ததால், இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,500 ஹெக்டேர் பரப்பிலும் முழுமையாக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இயற்கை ஒத்துழைத்ததால் நடவு செய்து 4 மாதங்களில் அறுவடையாகும் அம்பை-16 ரக நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. கடந்த மாதம் இறுதியில் அறுவடை தொடங்கி யது.

நல்ல மகசூலுக்கு கைகொடுத்த அதே மழை, தற்போது விவசாயிகள் வருவாய் பார்க்கும் நேரத்தில் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கெனவே, 500 ஹெக்டேர் வயல்களில் முதல்கட்ட அறுவடை முடிந்த நிலையில் 6 ஆயிரம் ஹெக்டேர் விளைந்த வயல்கள் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.

இதற்காக டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நெல்அறுவடை இயந்திரங்கள், குமரியில் முகாமிட்டு அறுவடைப் பணியை தொடர்ந்தன. இந்நிலையில், கனமழையால் நாகர்கோவில், புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, மணவாளக்குறிச்சி பெரியகுளம், நெல்லிகுளம் உட்பட 3,500 ஹெக்டேர் வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. விளைந்த நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து மீண்டும் முளைத்துள்ளன. குறிப்பாக பெரியகுளம் ஏலா, புத்தேரி, இறச்சகுளம் ஏலாக்களில் அறுவடையை பாதியில் கைவிட்டு இயந்திரங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மழை நின்று வெயில் அடிக்கும் நேரத்தில் மீண்டும் அறுவடைதொடங்கினாலும் 2 மணி நேரத்துக்குள் கனமழை பெய்கிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை சாக்கு மூட்டைகளில் கட்டி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர்.

கரோனா ஊரடங்கின்போது நல்ல மகசூலால் வருவாய் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள் பேரிழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களும் மீண்டும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சேலத்தில் இருந்து அறுவடை பணிக்கு இயந்திரங்களுடன் வந்திருந்த தொழிலாளர்கள் கூறியதாவது:

ஆண்டுதோறும் கன்னிப்பூ, கும்பப்பூ அறுவடைப் பணிக்காக சேலத்தில் இருந்து கன்னியாகுமரி மாட்டத்துக்கு வருவோம். தற்போது, கர்தார் ரக இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு மணி நேரத்துக்கு கூலியாக 2 ஆயிரம் ரூபாய் பெறுகிறோம். கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் அறுவடையை பாதியிலேயே நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் வயல் ஓரமாகவே தங்கியுள்ளோம். 3 நாட்களாவது மழை நின்று இயற்கை கைகொடுத்தால் தான் விளைந்த நெற்பயிர்களை கரைசேர்க்க முடியும். இல்லையென்றால் நெல் விவசாயிகளுக்கும், அறுவடை இயந்திரத் தொழிலாளர்களுக்கும் பேரிழப்புதான் என்றனர்.

SCROLL FOR NEXT