சேலம் மாவட்டத்தில் இன்னும் சில நாட்களில் கரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரிக்கக் கூடும். எனவே, நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மண்டபத்தில் கரோனா தொற்று சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிகிச்சை மையம் அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் ராமன் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் சேலம் மாவட்டத்தில் இந்நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, இந்நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புள்ளாகும் நபர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாதாரண அறிகுறிகள் உள்ள நபர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு ஆற்றுப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இம்மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பட்டி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 75 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கும், தொங்கும் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டுவரும் பல்நோக்கு மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி நோய் தொற்றின் தன்மை அதிகம் உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கெனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 650 படுக்கைகள் அமைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, மருத்துவமனை வளாகத்தில் கண் சிகிச்சை பிரிவில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கூடுதல் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், சேலம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், கரோனா சிகிச்சை பிரிவு மைய சிறப்பு மருத்துவர் சுரேஷ் கண்ணன், பொதுப் பணித்துறை (மருத்துவ பணிகள்) உதவி செயற்பொறியாளர் ஆனந்தராஜ் உமாபதி, உதவி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.