விவசாயிகளுக்கான பிரதமர் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடாக நிதியுதவி பெற்ற தகுதியற்றவர்கள், உடனடியாக அந்த தொகையை வங்கியில் செலுத்த வலியுறுத்தி சேலத்தை அடுத்த இடங்கணசாலையில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. 
தமிழகம்

விவசாயிகளுக்கான உதவித் தொகையை முறைகேடாக பெற்றவர்களிடம் தொகையை திரும்ப வசூலிக்கும் பணியில் 175 குழுக்கள்: கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான பிரதமர் நிதியுதவி திட்டத்தில் முறைகேடாக உதவித் தொகையை பெற்றவர்களிடம் இருந்து, தொகையை வசூலிக்க, 175 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மோசடியாக பெற்ற உதவித் தொகையை திரும்ப செலுத்த வலியுறுத்தி, கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மைய மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக இருக்கும் ஏற்காட்டிற்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும். இ-பாஸ் பெற விண்ணப்பிக்கும்போது அவர்கள் தங்குவதற்கான வசதியையும் ஏற்படுத்திக் கொண்டதற்கான ஆவணத்தையும் சேர்த்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் சரியாக உள்ள அனைத்து நபர்களுக்கும் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படுகின்றன.

தற்போது ஏற்காட்டில், அண்ணா பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

தற்போது, ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கு அனுமதி இல்லை. விரைவில் படகு சவாரி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான பிரதமர் நிதி உதவித் திட்டத்தில், 18,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பெற்றுள்ள மொத்தம் ரூ.6 கோடி நிதியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வங்கியாளர்கள், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து 175 குழுக்கள் அமைக்கப்பட்டு, நிதியுதவியை திரும்பப் பெறும் பணி நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் ரூ.25 லட்சம் நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக, ரூ.1.80 கோடி நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது.

தகுதியவற்றவர்கள் பெற்ற நிதியுதவித் தொகை முழுவதையும் வரும் 14-ம் தேதிக்குள் திரும்பப் பெறும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில், காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தால், கால நீட்டிப்பு செய்து பணிகள் தொடரும்.

நிதியுதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் பொது சேவை மையங்களைச் சேர்ந்த 2 நபர்கள் ஏற்கெனவே, கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிய விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான பிரதமர் நிதியைப் பெற்றுள்ள தகுதியற்றவர்கள், உடனடியாக அந்த தொகை முழுவதையும் வங்கியில் திரும்ப செலுத்த வேண்டும் என்று அறிவித்து கிராமங்கள் தோறும் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT