மக்கள் நலனுக்காக போராடி வந்த சுவாமி அக்னிவேஷின் மறைவு பேரிழப்பு என, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 12) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"புகழ்பெற்ற சமூக சேவகரும், ஆர்ய சமாஜம் அமைப்பின் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சுவாமி அக்னிவேஷ் எனது நண்பர்களில் ஒருவர். பாமகவின் மது ஒழிப்பு, புகை எதிர்ப்புக் கொள்கைகளின் தீவிர ஆதரவாளர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் நடைபெற்ற மதுவிலக்குக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸுடன், சுவாமி அக்னிவேஷும் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக போராடினார். பாமக சார்பில் டெல்லியிலும், தமிழ்நாட்டிலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சுவாமி அக்னிவேஷ் பங்கேற்றுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுவாமி அக்னிவேஷ், ஹரியானா மாநிலத்திலிருந்து அம்மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அம்மாநில கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனாலும், ஹரியானாவில் போராட்டம் நடத்திய கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர், கொத்தடிமை தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து போராடி வந்தார். மாவோயிசத் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
நாடு முழுவதும் நண்பர்களைக் கொண்டவரும், மக்கள் நலனுக்காக போராடி வந்தவருமான சுவாமி அக்னிவேஷின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் நண்பர்களுக்கும், சமூக சேவையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.