தமிழகத்தில் அமைப்பு சாராதொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனுக்காக 1982-ல் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் தொடங்கப்பட்டன.
இந்த வாரியங்களில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, திருமணம், கல்வி, மகப்பேறு, விபத்து கால உதவித்தொகை அளிக்கப்படுகின்றன. கோவையில் மட்டும் சுமார் 2.50 லட்சம் பேர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசின் உதவிகள், சலுகைகளைப் பெறுவதில் இடையூறுகள் உள்ளதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, கோவை மண்டல கட்டுமானத் தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்.) பொதுச் செயலர் ஜி.மனோகரன் கூறும்போது, "நல வாரிய செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை. கோவையில் சுமார் 8,500 பேர் நல வாரியங்களில் உறுப்பினராவதற்காக பிரத்யேக இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரியவில்லை.
மேலும், அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை. பழைய உறுப்பினர்களின் பதிவை புதுப்பிக்க ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும், உரிய பதில்கிடைப்பதில்லை. இதனால்,தொழிலாளர்கள் அரசின் நிதியுதவியைப் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள், பதிவு புதுப்பித்தவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை 13 ஆயிரம் பேருக்கு கிடைக்கவில்லை. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 11 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும்" என்றார்.
தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வெங்கடேஷ் கூறும்போது, ‘‘கடந்த ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்துக்கு ஓய்வூதியத் தொகை வழங்குவதற்காக அண்மையில் ரூ.1.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஓய்வூதிய நிலுவை வழங்கப்படும். ஆன்லைன் முறையில் புதுப்பித்தவர்களுக்கு, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள 1.16 லட்சம் உறுப்பினர்களில் 1.03 லட்சம் பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களில் ஓய்வூதியர்களைத் தவிர, மற்றவர்கள் சரியான முறையில் விண்ணப்பிக்கவில்லை’’ என்றார்.