தமிழகம்

ஏரியில் தண்ணீர் இல்லாமல் அவதியுறும் விவசாயிகள் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் இறைக்க அனுமதிக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

மதுராந்தகம் அருகே ஏரியில் இருக்கும் தண்ணீரை டீசல் இன்ஜின் மூலம் எடுத்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் மதுராந்தகம் வட்டாட்சியரிடம் நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்யூர் அருகே உள்ளது கரும்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஏரியை நம்பி 700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது, பாசன கால்வாய் மூலம் செல்லும் அளவுக்கு ஏரியில் தண்ணீர் இல்லை.

இதனால் ஏரியில் டீசல் இன்ஜினை பயன்படுத்தி விவசாயிகள் சிலர் தண்ணீர் எடுத்தனர். இதற்கு அந்தப் பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கோரி செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பாசனத்துக்கு பயன்படுத்தியதுபோக மீதமுள்ள நீர் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், ஆடு, மாடுகள் தண்ணீர்அருந்தவும் ஏரியில் பாதுகாக்கப்படும். டீசல் இன்ஜின் வைத்துமுழுவதும் இறைக்க அனுமதி அளிப்பது கடினம் என்று அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏரியை தூர்வார வேண்டும்

ஏரியில் போதிய தண்ணீர் சேகரமாகாததால் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு போதிய அளவு தண்ணீர்கிடைக்கும் வகையில் ஏரியைதூர்வார வேண்டும். மேலும் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க விவசாய கடன் உதவிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை 
சரிசெய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT