கிருஷ்ணா நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, மழைநீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது.
திருவள்ளூர் அருகே உள்ளது பூண்டி ஏரி. சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் பூண்டி ஏரியானது 121 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும்.
இந்த ஏரியில்தான் தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திர அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நீரில் முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், 2-வது தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும்.
ஆனால், முதல் தவணைக்கான கிருஷ்ணா நீர் இன்னும் கண்டலேறு அணையில் திறக்கப்படாததாலும், நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும் பூண்டி ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. இதனால், பூண்டி ஏரிகடந்த 10 நாட்களுக்கு மேலாகநீரின்றி வறண்டுக் காணப்படுகிறது. அதே நேரத்தில், ஏரியின் பள்ளமான இடங்களில் ஆங்காங்கே வெறும் 71 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
செப்டம்பர் 11 நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட புழல் ஏரியில் 2,224 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,611 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. இந்நீரால், சுமார் 4 மாதங்களுக்கு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
இருப்பினும், தமிழக அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு நீர் ஆண்டுக்கான கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் 2-ம் வாரத்தில் திறக்கப்படும் என, ஆந்திர மாநிலம் - திருப்பதியில் கடந்தமாதம் 29-ம் தேதி நடந்த தெலுங்குகங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில், ஆந்திர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அந்த உறுதியின்படி ஓரிரு நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என, எதிர்ப்பார்க்கிறோம்.
அவ்வாறு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டால், பூண்டி ஏரியின் தற்போதைய நிலைமாறி, நீர் இருப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.