தமிழகம்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்: மாவட்ட காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.வீரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டம் தொடர்பாக வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பாடுபடுவது என்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று செயற்குழுவில் குரல் எழுப்பப்பட்டது. இதை மாநிலத் தலைமைக்கு பரிந்துரைசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளரான வீரபாண்டியன், காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT