தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.எம்.நடராஜன் மறைவு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.நடராஜன் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.எம்.நடராஜன், சென்னைஉயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகநியமிக்கப்பட்டு 1994-ல் ஓய்வுபெற்றார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், குண்டர் தடுப்பு சட்ட அறிவுரை குழுமத் தலைவர், பி.டி.செங்கல்வராயன் கல்வி அறக்கட்டளை தலைவர் என பல பதவிகளை வகித்தவர். ஆட்டோ சங்கர் வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு கூறியவர்.

வயது முதிர்வு காரணமாக சென்னையில் அவர் நேற்று அதிகாலை காலமானார். ராசிபுரத்தில் உள்ள தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மனைவி ராமாயி அம்மாள் 2007-ல் இறந்துவிட்டார். இவருக்கு டாக்டர் என்.மோகன், வழக்கறிஞர் என்.ராஜசேகரன் ஆகிய மகன்கள், டாக்டர் என்.சந்திரா, எல்.வெண்ணிலா லோகேஷ் ஆகிய மகள்கள் உள்ளனர்.

நீதிபதி நடராஜன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி: நீதிபதி கே.எம்.நடராஜன் சமுதாய உணர்வு மிக்கவர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளை தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியானவர். அவரை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக 4 முறை நியமித்து அழகு பார்த்தவர் கருணாநிதி.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 100 ஆண்டு கழித்து, நீண்ட போராட்டத்துக்கு பிறகுதான் வன்னியர் சமூகத்தின் கே.எம்.நடராஜன் நீதிபதியானார். சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்ட அவரது மறைவு பேரிழப்பு.

SCROLL FOR NEXT