காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேர்மை, தூய்மையுடன் பணிபுரிந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஏ.பால்ராஜ்பாண்டியன். இவருக்கு நெடுஞ்சாலை ரோந்துப் பணியின் போது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றது, திருமணமானதை மறைத்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றியது, மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை தபாலில் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 2014-ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.
குடும்ப வன்முறை சட்டத்தில் பால்ராஜ்பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான குற்ற வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் பால்ராஜ்பாண்டியன் மீதான 3 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
பின்னர் இந்த தண்டனையை மதுரை மாநகர் காவல் ஆணையர் மாற்றியமைத்து 2 ஆண்டுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி அளித்த மனுவை டிஜிபி நிராகரித்து 30.7.2019-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு தனது பணிமூப்பை கணக்கிட்டு 11.2.2019-ல் இருந்து பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி பால்ராஜ்பாண்டியன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஒழுக்கமான படையில் உள்ளார். அவர் சட்டத்தில் பார்வையில் மட்டுமல்ல, சமூகத்தின் பார்வையிலும் சட்டத்துக்கு உட்பட்டும், பிறருக்கு நல்ல உதாரணமாகவும் பணிபுரிய வேண்டும். காவல்துறை போன்ற ஒழுக்கமான படைகளில் பணிபுரிபவர்கள் நடத்தை விதிகளை கடுமையான பின்பற்ற வேண்டும்.
பணியின் போதும், பொது வாழ்விலும் நேர்மை மற்றும் தூய்மையுடன் பணிபுரிய வேண்டும். இதில் தவறும் நிலையில் சமூகத்தில் கவால்துறைக்கு இருக்கும் நம்பிக்கைக்கு களங்கள் ஏற்படும்.
மனுதாரருக்கு குறைந்தளவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் தலையிட முகாந்திரம் இல்லை. மனுதாரரின் கருணை மனுவை நிராகரித்து டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.