சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கரோனாவில் இருந்து குணமடைந்த சிறுவனை வாகன ஓட்டுநர் பாதிவழியில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காளையார்கோவில் அருகே நற்புதத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த வாரம் சைக்கிளிலில் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
இதில் கரோனா தொற்று இருப்பதாக கூறி அச்சிறுவனை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அச்சிறுவன் குணமடைந்தநிலையில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்த தனியார் வாகனம் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருடன் குணமடைந்த சிலரும் சென்றுள்ளனர். இதையடுத்து வாகன ஓட்டுநர் மற்றவர்களை வேறு பகுதிகளில் இறக்கவிட வேண்டுமென கூறி அச்சிறுவனை அவரது வீட்டில் இறக்கிவிடாமல், காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.
அச்சிறுவனுக்கு ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயமும் குணமாகாததால் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனின் பெற்றோரின் தகவல் தெரிவித்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனை பாதிவழியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கூறுகையில், ‘‘ சம்பவம் குறித்து விசாரிக்க சொல்லியுள்ளேன். இனிமேல் வாகனங்களில் கூடுதலாக ஒரு ஊழியரையும் அனுப்பி வைத்து, அவரவர் வீடுகளில் இறக்கிவிட அறிவுறுத்தியுள்ளேன்,’’ என்று கூறினார்.