சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் 2 ஓட்டுநர்களும் மதுபானம் அருந்திவிட்டு ஓட்டியதாக புகார் எழுந்ததையடுத்து விருதுநகர் போலீஸ் இருவரையும் கைது செய்தது.
நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக் கிழமை இரவு ஆம்னி ஓட்டுநர் குடித்துவிட்டு பஸ்ஸை தாறுமாறாக செலுத்தியுள்ளார், இதனால் பீதியடைந்த பயணிகள் பஸ்ஸை நிறுத்தும் படி மன்றாடியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் அதனைப் புறக்கணித்தனர்.
ஒரு நேரத்தில் ஓட்டுநர் இரண்டு கைகளையும் ஸ்டியரிங்கிலிருந்து எடுத்து விட்டு ஒரு காலைத் தூக்கி ஸ்டியரிங்கில் வைத்து ஓட்டியதாக முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் ஒருவர் பீதியுடன் மற்ற பயணிகளிடத்தில் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே இவ்வாறாக வண்டியை ஓட்டியுள்ளார் அவர், இதனையடுத்து கேபின் கதவை பயணிகள் பயங்கரமாக தட்டி திறக்குமாறும், வண்டியை நிறுத்துமாறும் சப்தம் போட்டுள்ளனர். ஆனால் ஓட்டுநர்கள் எந்த வித பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து மத்திய அரசு பொறியாளர் சரவணன் அய்யாக்குட்டி என்பவர் விருதுநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஏற்கெனவே அன்று வண்டியை எடுக்கும் போது திருநெல்வேலி வருவதற்கு வழக்கத்துக்கு மாறான பாதையில் வண்டியை ஓட்டி வந்துள்ளனர், இதனை தட்டிக் கேட்ட பெண் பயணியை ஓட்டுநர்கள் இருவரும் கடுமையாக சாடியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு 11.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது ஓட்டுநர்களை சோதனை செய்த போது பி.செந்தில் குமார் மற்றும் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் அதிக அளவில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
இருவரையும் நள்ளிரவில் அரசு மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்துச் சென்று சோதித்த போது கடுமையாக மது அருந்தியிருந்தது நிரூபணமானது.
இது படுக்கை வசதி கொண்ட பேருந்து. குழந்தைகள். பெண்கள் உட்பட 33 பயணிகள் இருந்தனர். 2 மணிநேரம் கழித்து மற்றொரு ஓட்டுநர் மூலம் பேருந்து சென்னைக்குப் புறப்பட்டது.