மதுரை அருகே 8 ஆண்டுகளுக்க முன்பு மெக்சிகோ பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் அவரின் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மார்ட்டின் மான்ட்ரிக் (40). இவர் கணிதத்தில் பி.எச்டி., பட்டம் பெற்றவர். ஓராண்டு பி.டி.எஃப். ஆராய்ச்சி பட்டம் பெறுவதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 25.6.2011 முதல் தங்கியிருந்தார்.
இவரும், மெக்சிகோவைச் சேர்ந்த செசில்லா டேனிஷ் அகோஸ்டா (36) என்பவரும் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு 5 வயதில் அடிலா (தற்போது வயது 13) என்ற மகள் உள்ளார். அடிலா தந்தையுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்தாள்.
கேரள மாநிலம் திருச்சூரில் செசில்லா மோகினியாட்டம் கற்று வந்தார். திருச்சூரில் தங்கியிருந்த அவர் மகளை பார்ப்பதற்காக மாதம் இரு முறை கிருஷ்ணன்கோவில் வருவது வழக்கம். கடந்த 4.4.2012-ல் அடிலாவை பார்க்க செசில்லா கிருஷ்ணன்கோவில் வந்தார்.
அப்போது மகளை பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கணவரிடம் செசில்லா கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 9.4.2012-ல் அடில்லா பள்ளிக்கு சென்ற பிறகு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செசில்லாவை மார்ட்டின் கத்தியால் குத்தியுள்ளார். இதில் செசில்லா இறந்தார்.
பின்னர் அவரின் உடலை டிராவல் பேக்கில் அடைத்து கார் டிக்கியில் வைத்து பல இடங்களில் சுற்றி திரிந்த மார்ட்டின், மறுநாள் மதுரை ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் அருகே புதரில் வைத்து செசில்லா உடலை டிராவல் பேக்குடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
திருச்சூருக்கு செசில்லா திரும்ப வராதது குறித்து அவரது நண்பர் ஒருவர் மார்ட்டினிடம் போனில் கேட்டுள்ளார்.
அதற்கு செசில்லாவை திருச்சூருக்கு பேருந்தில் ஏற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் செசில்லா காணாமல்போனது தொடர்பாக மார்ட்டின் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
செசில்லா உடல் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு காரின் கியர்பாக்ஸ் சைடு கவர் கிடந்தது. அது மார்ட்டின் காரில் இருந்தது என்பதை உறுதி செய்த போலீஸார், செசில்லாவை கொலை செய்து உடலை எரித்தது மார்ட்டின் என்பதை ஆஸ்டின்பட்டி போலீஸார் உறுதி செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை நீதிபதி இளங்கோவன் விசாரித்து இன்று தீர்ப்பளித்தார்.
அதில் செசில்லாவை மார்ட்டின் மான்ட்ரிக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ட்டினுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி கூறியுள்ளார்.