புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் அம்மன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன். அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு சொந்தமான இடத்தில் 3 மாடி கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 11) அதே ஊரில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்த சிமெண்ட் கலவை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்த செல்வகுமார் (35), விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆழந்தூரை சேர்ந்த நவீன்குமார் (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் 3-வது தளம் ஓட்டும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, ஜல்லி கலவையை தயார் செய்து, அதனை லிப்ட் மூலம் கொண்டு சென்று 3-வது தளத்தை ஒட்டும் பணியை செய்தனர். ஜல்லி போடும் பணி முடிந்த நிலையில் மற்றவர்கள் கீழே இறங்கிவிடவே செல்வகுமார், நவீன்குமார் கலவை கொண்டு செல்ல பயன்படுத்திய லிப்ட்டிலிருந்த இரும்பு ரோப்பை கழற்றியுள்ளனர். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் ரோப் உரசியதில் செல்வகுமார், நவீன்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்றாவது மாடி தளத்தில் நவீன்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கனூர் ஆய்வாளர் கிட்லா சத்தியநாராயணா, காட்டேரிக்குப்பம் உதவி ஆய்வாளர் முருகானந்தம், திருக்கனூர் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர். இது தொடர்பாக செல்வகுமார் மனைவி பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.