அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்துக்கே முன்மாதிரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழி கொள்கை தான் எங்களது லட்சியம், அதிமுகவின் கொள்கை. அதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு தெரியும்.
திமுகவினர் டி-ஷர்ட் ட்ரெண்டிங் மூலம் உண்மையை மறைக்கின்றனர் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கொள்கை நிலைப்பாட்டில் எந்தளவு இருக்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
தமிழகத்தில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தடைகளையும் தாண்டி வியாபாரிகள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். திரையரங்குகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளது.
இன்னும் வழிமுறைகள் விதிமுறைகள், மாநில அரசுக்கு அனுப்பப்படவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதல்களை சொன்னாலும், இங்கு உள்ள நிலைமையைப் பொறுத்து, மருத்துவ குழுவினரின் அறிக்கையைப் பெற்று தமிழக முதல்வர் உரிய முடிவெடுப்பார்" என்றார் அவர்.