எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
தமிழக சினிமா, அரசியலில் சகாப்தமாக விளங்கியவர் எம்ஜிஆர். இவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. ஆரம்பகாலத்தில் இருவரும் ஒன்றாக நாடக கம்பெனியில் சேர்ந்து பயிற்சிப்பெற்று ஒன்றாக சினிமாவுக்கு வந்தவர்கள்.
சினிமாவில் எம்ஜிஆர் பிரபல முன்னணி ஹீரோவாக ஆனவுடன் எம்ஜிஆரின் சினிமா சம்பந்தமான பொறுப்புகளை எம்.ஜி.சக்ரபாணி கவனித்து வந்தார். 1986-ம் ஆண்டு சக்ரபாணி மறைந்தார். அடுத்த ஆண்டே எம்ஜிஆர் மறைந்தார். எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகன்களில் ஒருவர் எம்.ஜி.சி.சந்திரன்(75). இவர் மனைவி சித்ராவுடன் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் ‘அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக’ என்கிற கட்சியை ஆரம்பித்தார். கரோனா பாதிப்பால் கடந்த திங்கட்கிழமை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென உடல்நலம் மோசமான நிலையில் மருத்துவ குழுவினர் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சை துவங்குவதற்கு முன்னரே சிகிச்சை பலனின்றி எம்.ஜி.சி.சந்திரன் உயிரிழந்தார்.
அவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி குடும்பத்தார் முன்னிலையில் அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.