தமிழகம்

தமிழக தொழிலாளர்கள் செல்ல முடியாததால் கேரள ஏலத் தோட்டங்களில் பழுத்து விரயமாகும் காய்கள்

என்.கணேஷ்ராஜ்

கடந்த 5 மாதங்களாக தமிழக தொழிலாளர்களை கேரள அரசு தோட்டப் பணிக்கு அனுமதிக்கவில்லை. இதனால் பராமரிப்பின்றி ஏலச் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. விளைந்த காய்களும் பழுத்து வீணாகின்றன.

இந்தியாவில் 70 சதவீத ஏலக்காய்கள் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விளைகிறது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த சாஸ்தா ஓடை, சங்குண்டான், மாதவன்கானல், இஞ்சிபிடிப்பு, சக்குபள்ளம், புளியன்மலை, புலித்தொழு, ஆனவிலாசம் பகுதிகளில் ஏலத்தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இப்பகுதியில் சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் அமைந்துள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் தேனி மாவட்ட தமிழர்களுக்குச் சொந்தமானவை. நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கேகே.பட்டி, கம்பம், போடி, சிலமலை ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் பராமரிப்பு, மகசூல் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் தினமும் சென்று வருவர். இவர்களுக்காக கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய வழித்தடங்களில் ஏராளமான ஜீப்கள் இயக்கப்படுகின்றன.

கரோனா தொற்று தொடங் கியதுமே கேரள எல்லைகள் மூடப்பட்டன. இ-பாஸ் பெற்றுச் சென்றாலும் அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் தொழிலாளர்களால் பணிக்குச் செல்ல முடியவில்லை.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது.

ஏற்கெனவே சீரான மழைப் பொழிவு அங்கு இல்லை. குறிப்பிட்ட நாட்களில் கொட்டித் தீர்த்த மழையினால் மண் சரிவு ஏற்பட்டு ஏராளமான செடிகள் நிலத்தில் புதைந்தன. இதனால் மகசூல் குறைந்துள்ளது. தற்போது காய் பறிப்பு பருவமாகும். விளைந்து இருக்கும் ஏலக் காய்களைப் பறிக்க தொழிலாளர்கள் இல்லாததால் அவை பழுத்து கீழே விழும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏலத் தொழிலாளர்களை தோட்டப் பணிகளுக்குச் சென்று வர கேரள அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கேரள ஏலக்காய் விவசாயிகள் தொழிற்சங்கச் செயலாளர் சதாசிவ சுப்ரமணியன் கூறியதாவது: கர்நாடக எல்லையான காசர்கோடு பகுதி வழியே இ-பாஸ் இன்றி செல்ல முடிகிறது. எனவே தொழிலாளர்களை மட்டுமாவது ஏலத் தோட்டங்களுக்கு இப்பகுதியில் அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு செடியும் 10 அடி தூரத்தில்தான் அமைந்திருக்கும். எனவே சமூக இடை வெளியு டன்தான் இவர்கள் வேலைபார்க்க முடியும். ஆட்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி கேரளாவில் உள்ளவர்கள் தினக் கூலி ரூ.430-ல் இருந்து ரூ.700 வரை உயர்த்தி விட்டனர். ஏற்கெனவே மண் சரிவு, அதிக மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT