மதுரை நகர் பகுதியிலிருந்து புறநகர் மற்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான சாலைகளில் அதி நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி 18 முக்கியச் சாலைகளில் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
குற்றச்செயல் புரிவோர் மதுரை நகருக்குள் வந்து செல்லப் பெரும்பாலும் குறிப்பிட்ட 18 சாலைகளைத்தான் பயன்படுத்துகின்றனர் என காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்தச் சாலைகளை தீவிர மாகக் கண்காணிக்குமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட் டுள்ளார். அதன் முதல் கட்டமாக அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான கேமராக்கள் குறிப்பிட்ட தூரத்தில் உள்ள காட்சிகளை மட்டுமே பதிவு செய்யும் வகையில் உள்ளது. அதன் திறனும், படத்தரமும் குறைவாக உள்ளது. தற்போது பொருத்தப்படும் அதி நவீன கேமராக்கள், வாகனங்களில் பயணி க்கும் நபர்களின் முகம், வாகனப் பதிவெண் உள்ளிட்டவற்றை துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் வாய்ந்தவை என போலீஸார் தெரிவித்தனர். சிந்தாமணி சாலை உள்ளிட்ட ஓரிரு வழித்தடத்தில் தற்போது அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது:
நகருக்குள் குற்றச்செயல் புரிந்துவிட்டுத் தப்பிச் செல்வோர், எந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில், எந்த வாகனத்தில் சென்றனர், வாகனங்களில் வரும் சந்தேகத்துக்குரிய நபர்கள் உள்ளிட்டவற்றை இந்த கேமரா பதிவுகள் மூலம் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு கேமராவுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகிறது. வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த கேமராக்களை சாலைகளில் பொருத்த முயற்சித்து வருகிறோம். நகரின் முக்கியச் சாலைகளில் போலீஸ் கண்காணிப்புத் தீவிரமாக இருக்கிறது எனத் தெரிந்தாலே, குற்றச்செயல் புரிவோர் நகருக்குள் நுழைய அச்சப்படுவர். இதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என்றார்.