சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண் துறையின் கீழ், ‘பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் மழைத் தூவான் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில், 6,500 ஹெக்டேர் பாசன பரப்புக்கு நுண்ணீர் பாசன கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,911 ஹெக்டேருக்கு விவசாயிகள் கருவிகள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசனக் குழாய்களை விவசாயிகள் பரிந்துரைக்கும் நிறுவனமே, அதை அளவீடு செய்து, பொருத்தித் தரும். இதனை வேளாண் களப்பணியாளர்கள், வேளாண் பொறியியல் துறையினர் ஆய்வுசெய்து அறிக்கை அளித்தப் பின், அதற்கான தொகை வழங்கப்படும்.
இவற்றில், விவசாயிகளுக்காக பொருத்தப்படும், இந்த நுண்ணீர் பாசனக் குழாய்கள் ஒரு மீட்டர் ரூ.11 மதிப்புடையவை. இவ்வாறுபொருத்தப்பட்டதாகக் கூறப்படும் நுண்ணீர் பாசனக் குழாய்கள், பயன்படுத்தாமலேயே கடலூர் சிட்கோ பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் குடோனில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் முருகனிடம் கேட்டபோது, “நுண்ணீர் பாசனத் திட்டம் 2008-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.ஒருமுறை வழங்கப்படும் குழாய்களை 7ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அதன்பின் பயன்பாட்டுக்கு உபயோகமற்றதாகி விடுவதால், அவ்வாறு குடோன்களில் போட்டிருக்க வாய்ப்புண்டு” என்று தெரிவித்தார்.
இதுபற்றி நவீன வேளாண்மையில் ஆர்வம் உள்ள பெண்ணாடத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரிடம் கேட்டபோது, “அடிப்படையில் இந்த நுண்ணீர் பாசனத் திட்டம் மிகுந்த நன்மை தரக்கூடியது. ஆனால், விவசாயிகளிடையே, இதன் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. இதற்கிடையே ஆண்டுதோறும், இதற்கான குறிப்பிட்டத் தொகை ஒதுக்கப்படுகிறது. அத்தொகையை பெற விரும்பும் நிறுவனங்கள், நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கான குழாய்களை விற்க விவசாயிகளை நாடுகின்றனர். அவர்களும் வேளாண்துறை மூலம் இதை பொருத்துகின்றனர்.
பின்னர், இந்த பயன்பாட்டில் ஆர்வம் இல்லாமல் இப்படி பழைய பொருட்கள் கடையில் விவசாயிகள் போடுகின்றனர். தவிர, மானியத் திட்டம் ஒப்புதல் கிடைத்ததும், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு இதைப் பொருத்தாமல் விட்டு விடுகின்றன. அப்படி நாளடைவில் சேரும் நுண்ணீர் பாசன குழாய்களும் இப்படி காயலான் கடைகளில் வீசப்படுகின்றன. வேளாண்துறை இதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். நவீன வேளாண்மையால் எந்த அளவு நீர் சிக்கனம் ஏற்படுகிறது என்பதை எளிய விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அதை விட அவசியம். அதை செய்யாதபட்சத்தில் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.