தமிழகம்

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு: சிபிசிஐடி முன்பு ஆஜராக மகனுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான முறைகேடு வழக்கு தொடர்பாக அவரது மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரியை முறைகேடாக வாங்கியுள்ளதாக குவிட்டன்தாசன் என்பவர் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘‘ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மகன், மகள், மைத்துனர் என 5 பேருக்கு சம்மன் அனுப்பியும் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை" என குற்றம்சாட்டினார்.

அப்போது ஜெகத்ரட்சகன் தரப்பில், ‘‘ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக" தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்துக்கு புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும், அவர் சிபிசிஐடி போலீஸார் முன்ப ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் இதுதொடர்பாக அக்.5-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT