தமிழகம்

நதிநீர் பிரச்சினைகள் குறித்து திருவனந்தபுரத்தில் தமிழகம் - கேரளா இன்று பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

தமிழகம் - கேரளா இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்த 2-வதுகட்ட பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

தமிழகம் - கேரளா இடையே முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஆண்டு செப்.25-ம் தேதி முதல்வர்பழனிசாமி, அமைச்சர் வேலுமணிமற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம் சென்று, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தொடர்பாக இரு மாநிலத்திலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற தனி குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து திட்டம் நிறைவேற்றப்படும். ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு, சிறுவாணி பிரச்சினைகளுக்கும் இக்குழு மூலம் தீர்வு காணப்படும். முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதையடுத்து, தமிழக பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன் தலைமையிலும், கேரள நீர்வள ஆதாரத் துறை செயலர் பி.அசோக் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்தஆண்டு டிச.12-ம் தேதி சென்னையில் இவ்விரு குழுக்களின் முதல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பரம்பிக்குளம் - ஆழியாறு நதிநீர் ஒப்பந்தம் சம்பந்தமாக உள்ள நடைமுறை சிக்கல்கள், ஒப்பந்தத்தை இரு மாநில மக்களுக்கு பயனுள்ளதாக எவ்வாறு அமைப்பது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இக்குழுவின் 2-வது கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுதலைவர் சுப்பிரமணியன், கோவைபொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றது.

SCROLL FOR NEXT