தமிழகம்

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகன முறைகேடு சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 5 போலீஸார் வெளிமாவட்டங்களுக்கு மாற்றம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸார், வாகன சோதனையின்போது விதியை மீறுவோரின் இரு சக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கரோனா ஊரடங்கை மீறி வாகனத்தில் பயணிப்போரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் உரிய ஆவணங்களை பெற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குமரி எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆய்வு செய்தபோது அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை முறைகேடாக வேறு நபர்களுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

8 இரு சக்கர வாகங்களை ஆய்வாளர் உட்பட 5 போலீஸார் சேர்ந்து முறைகேடாக வழங்கியதாக எஸ்.பி.யிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ், எஸ்.ஐ. சுரேஷ்குமார், காவலர்கள் விக்டர், ரெனி, சுனில்ராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பத்ரிநாராயணன் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருசக்கர வாகன முறைகேடு சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீஸாரையும் வெளிமாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி முருகன் உத்தரவு பிறப்பித்தார்.

இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், எஸ்.ஐ. சுரேஷ்குமார் சிவகங்கை மாவட்டத்திற்கும், காவலர் விக்டர் விருதுநகருக்கும், சுனில்ராஜ் திண்டுக்கல் மாவட்டத்திறகும், ரெனி ராமநாதபுரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT